கோர்வையற்ற வார்த்தைகளாகவே முடித்துவிடப் போகிறேனோ என்ற தோன்றலோடே இந்தப் பதிவைத் துவங்குகிறேன். முன்னெச்சரித்தும் கொள்கிறேன். பரண் ஏறி வெகுகாலமாகி, துருக்கள் துகள்களாகும் நிலையாகிவிட்ட நட்பெல்லாம் இன்னமும் தேவைதானா என்ற எண்ண ஓட்டம்தான் இது. பழையன கழிதலும் புதியன புகுதலும் கால ஓட்டத்தின் கட்டாயமும், மிக இயல்பாய் இந்த உலகமே பழகிக்கொண்டதுமான நியதிதான். மாற்றம் ஒன்றே மாறாதது என்றோ, மாற்றம் என்பதே வாழ்வின் அடையாளம் என்பதோ நாம் எப்போதும் சொல்வதுதான். நட்பின் நிலையும் இதற்கு அப்பாற்பட்டதல்ல என்றே என் மனம் சொல்கிறது. காலத்தின் மாற்றங்களுக்கேற்ப, புதிய நட்பைத் தேடிச் செல்வதும் ஏற்றதே அல்லவா?
உண்மையில் பழையது/புதியது, தேவையானது/தேவையில்லாதது என நட்பில் பார்ப்பதற்கு முன், நட்பென்றால் என்னவென்ற ஆழ்ந்த புரிதல் இருந்தால் மட்டுமே இதற்கான ஒரு தெளிவான விவாதத்திற்குள் சென்று பயணிக்க முடியும்.
நிற்க!
ஒரு முனையில் -
காலங்காலமாய் ஒரே ஊர், ஒரே பள்ளி, கல்லூரி, ஒரே இடத்தில் பணியென எல்லா இடங்களிலும் தொடரும் ஒரே நட்பு.
மறுமுனையில் -
பள்ளி முடிப்பதிற்குள் நான்கைந்து இடம் மாறி, ஒன்றுக்கொன்றான தொடர்புகள் அறுபட்ட வாழ்வில் வரும் நட்புகள்.
இந்த இரு துருவங்களுக்கு இடையில்தான் பெரும்பாலான நட்பின் இழைகள் பின்னிப் பிணைந்து வாழ்ந்துகொள்கின்றன. நெருக்கமாகத் தொடங்கியவை ஒதுங்கிவிடலாம்; அருகாமையிலிருந்தாலும் உணர்வின்றித் தொடரும் நட்புகளும் இருக்கலாம்.
ஆறிலிருந்து அறுபதுவரை "சோ" நட்பெல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது. இல்லையில்லை, அப்படியொரு சூழ்நிலை வந்தால் என் நட்பும் அப்படியொரு தாக்கத்தைத் தரும் என்று நீங்கள் தீர்மானமாய் வாதிடுவீர்களானால், உங்களின் அந்த நம்பிக்கை, உங்களுக்கு நட்பின் தன்மையும், அது சாதாரண உறவுகளுக்கு மத்தியில் எப்படி வேறுபடுகிறது என்பதையும் நன்கு புரிந்திருக்கும் நிலையைப் பறைசாற்றுவதாகவே கருதுகிறேன்.
"உடுக்கை இழந்தவன் கைப் போல" என்கிறார் வள்ளுவர். உண்மைதான். என்னைப் பொருத்தவரை இது தலையாயதும் கூடத்தான். ஆனால் அது மட்டுமே நட்பு இல்லை. சில நேரங்களில் இடுக்கண் தருவது கூட நட்பில் வந்து போவதுதான் என்றே நம்புகிறேன்.
நட்பு என்பது தனித்தனி கூறுகளாகப் பார்க்கக் கூடியதில்லை; அது பல இயல்புகளின் மந்திரக்கலவை. அத்தனையும் எல்லா நட்பிலும் இருக்க வேண்டியதில்லை. ஒரு பானை சோற்றிக்கு ஒரு சோறே பதம் என்பது போல, நட்பை நம்மால் மிக எளிதாய் புரிந்துகொள்ள முடியும். உணர்ந்துகொள்வதன் மூலமே மட்டும் தனது வரையறையை முழுமையாய்த் தருகின்ற சிலவற்றுள் நட்பும் ஒன்று.
மீண்டும் முதலில் எழுப்பிய கேள்விக்கே வருகிறேன். தொடர்பில் கூட இல்லாத பழைய நட்பெல்லாம் நினைவில் சுமக்க வேண்டுமா, இல்லை அவற்றைக் காலக் காற்றில் கரைத்து விடுதலைப் பெற்றுக் கொள்வோமா? உதாரணத்திற்கு, என்னுடைய பள்ளிக்கால நண்பர்கள் பலரும் என்னுடைய தொடர்பில் இல்லை. தேவைப்படுவதும் இல்லை. அரிதாய் சந்தித்தால் கூட, ஒரு வணக்கத்தோடு விடைபெறுவதை நானும் அவர்களும் இயல்பாகச் செய்கிறோம். துளி வலியோ, வருத்தமோ இருப்பதில்லை. சிறு தயக்கம் கூட இல்லை. ஒருவேளை, கழிந்து போன நட்பென்றால் இதுதான் போலும்!
சரி, நான் இப்படி முடித்துக்கொள்கிறேன்; இதன் சரி, தவறு என்ற நிலையை உங்கள் நட்பின் அனுபவங்கள் உங்கள் உள்ளத்தோடு உரையாடித் தீர்மானிக்கட்டும். காலத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிர் துறப்பவையல்ல நட்பு. ஒரு சிறு துளி தூறலில் கூட மீண்டும் துளிர்த்துக் குலுங்கும் அமரத்துவ மரமே பேருணர்வுடன் உறங்கிக்கொண்டிருக்கும் நட்புகள். காலக் கணக்கில் அடங்காததால், பழையன கழிதல் நட்பில் இல்லை.
Beyond your imagination
Comments