நெடுந்தொலைவு பயணிக்கின்ற நட்புகளெல்லாம் வரம் என்றால், பயணித்த சிறு காலற்றே பெருந்தாக்கம் கொடுக்கும் நட்பெல்லாமும் வரமேயாகும். அப்படி ஒரு நட்புதான் ஹன்சிக்கு போலா தந்து சென்றது.
போலா வந்த பிறகுதான் "டால்மேஷன்" வகை நாய்களைப் பற்றியே எனக்குத் தெரியும். நல்ல வெள்ளை நிறத்தில் அங்கங்கே கருப்பு திட்டுக்கள் பார்க்கவே புதுமையாக இருக்கும். போலா சில மாதக் குழந்தைதான், ஆனால் ஹன்சியைவிட இரு மடங்கு உயரம். பயங்கர துருதுரு. நாய்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும், நட்பை வெளிக்காட்டிக் கொள்வதிலும் குறையிருக்காது. அந்த நம்பிக்கையில் தான் போலாவை வீட்டிற்குக் கூட்டி வந்தோம்.
ஹன்சி, ஏறக்குறைய ஒன்றரை வயதில், எங்கள் வீட்டுக்கு வந்த போது அதனால் பின்னங்கால்களால் நிற்க முடியாது. கொஞ்சம் நகர வேண்டுமென்றால் கூட, உடம்பை தரையில் தேய்த்து இழுத்துத்தான் நகரும். அதைப் பார்க்கவே வேதனையாக இருக்கும். பல மருத்துவர்களைப் பார்த்தும் எந்த பயனுமில்லை. பெரும்பாலான நேரங்களில் அதன் கண்களின் இயக்கம்தான் அதன் மொத்த இயக்கமுமே. எந்த சத்தமும் கூடச் செய்யாது. ஏதாவது காப்பகத்தில் விட்டுவிடலாம் என்று கூட அடிக்கடி நினைத்தோம். ஹன்சி நடப்பதற்கான எங்களது அத்தனை முயற்சிகளையும் கைவிட்ட பிறகு அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஹன்சி தானாக முயன்று நிற்க ஆரம்பித்தது, பின்னங்கால்கள் பிண்ணி விழுந்தாலும் எழ ஆரம்பித்தது. எந்த ஒரு நாத்திகனையும், "இது கடவுள் செயல்" எனத் தடுமாறச் செய்யும் தருணமது. இந்த நிலையில்தான் போலா எங்கள் வீட்டிற்கு வந்தது.
இதுதான் நான், என் மனதில் எந்த வஞ்சமும் கெடுதலும் இல்லை, எல்லாம் நன்மைக்கே என்பது போன்றது போலாவின் இயல்பு. போலாவின் ஒவ்வொரு செயலும் மகிழ்வு தருவதாகவே இருக்கும். எங்களோடு மட்டுமில்லாமல் ஹன்சியோடும் எளிதாகப் பழகிக் கொண்டது. போலோவின் கர்ஜனையான குரலும், மின்னல் போன்ற வேகமும் பிரமிக்க வைக்கும். நான் இரண்டு அடி வைக்கிறதுக்குள் மாடிக்கு ஓடிவிட்டுத் திரும்பி வந்து நிற்கும். அமைதியாகப் படுத்திருக்கிற ஹன்சியை விளையாட்டாய் சீண்டி விடுவது போலாவின் பிரியமான செய்கைகளில் முதன்மையானது.
ஏதாவது வெளியே கேட்கும் சத்தத்திற்கு போலா குரைத்தால் ஹன்சியும் ஒரு ஓரமாய் நின்று குரைக்கும். வேகமாய் ஒடி வரும் போலாவின் வழி மறிக்காமல் சட்டென விலகிக் கொள்ளும். தனது விளையாட்டுப் பொருளை எடுத்தால் துரத்திச் செல்லும். இத்துணை இன்பங்களும் வெகு சில மாதங்களுக்கு மட்டும்தான் என்பது நாங்கள் யாரும் எதிர்பார்க்காதது.
இப்பொழுது துள்ளிக் குதித்து படியேறும் ஹன்சிக்கு அதில் போலாவின் பங்கு என்ன என்பது தெரியாது என்றே நினைக்கின்றேன். இனி போலா தனது வாழ்வில் வரப்போவதேயில்லை என ஹன்சி அறியப் போவதில்லை. ஒருவேளை நம்மைப் போல உணர்வுகளைப் புரிந்து வெளிப்படுத்திக் கொள்ள முடியுமாயின் "மனசெல்லாம் உன்னையே நினைத்து" பாடல் வரிகள் போலத்தான் ஹன்சியின் உள்ளமும் தவித்துக் கொண்டிருக்கும். போலா போன்ற நட்பு நம் வாழ்வில் கூட வந்து பிரிந்திருக்கலாம். அப்படியிருந்தால், நண்பர்கள் தின வாழ்த்துச் சொல்லும் போது நினைவுகளாய் வந்து நிச்சயமாய் கண் நனைத்துப் போவார்கள்.
Comments