நதி#நட்பு
தாமரைகளும் ரோஜாக்களும் ஒரு மொட்டாயிராமல் மலராக மலர்ந்துவிடப் போவதில்லை. எந்த மலரும் அப்படித்தான். அப்படித்தானே ஒரு நதியின் துவக்கம் கூட! ஏதோ ஒரு சிறு ஊற்று. ஏதோ ஒரு சிறு உந்துதல். சிறு ஓட்டம். இயற்கையின் நியதியா, கடவுள் விதித்து வைத்த முடிவா என்ற கேள்வியெல்லாம் பொருளற்றவையே! இதுதான் வழி, இப்படித்தான் பயணம் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இல்லை. கடல் போய் சேருமென்ற கனவெல்லாம் இருப்பதற்கான வாய்ப்பொன்றும் இல்லை. முதலே கூட முடிவாகவும் இருக்கலாம். அப்படித்தானே ஒரு நட்பின் துவக்கமும் கூட!
நதி#நட்பு
சிகப்பு ஒரு வண்ணம்தான். ஆனால் பார்க்கின்ற சிகப்பெல்லாம் ஒன்றல்ல. சேர்க்கையின் விகிதத்திற்கேற்ப அதற்குள் ஆயிரமாயிரம் கலவைகள். எந்த வண்ணமும் அப்படித்தான். அப்படித்தானே ஒரு நதியின் தன்மையும் கூட! கருங்கல் பாறை நீர் வந்து இணைந்துக் கொள்ளலாம். செம்மண் வழியோடிய சிற்றாறு சேர்ந்துக் கொள்ளலாம். குப்பையை அள்ளி வரும் கழிவுநீரும் கலக்கலாம். தன் நீர் தன்மையைத் தந்து தன்னோடு கலந்த தன்மையையும் ஏற்று பயணிக்கும் நதி. நல்லது கெட்டது என்ற பேதமெல்லாம் இல்லை. அத்தருணத்தில் எது மிகுதியோ அதுவே அவ்விடத்தில் அந்நதியின் தன்மை. அப்படித்தானே ஒரு நட்பின் குணங்கள் கூட!
நதி#நட்பு
நாடகக்கலை அது வடிவெடுத்த காலத்தில் இருந்தது போல் இப்போது இல்லை. காலத்திற்கேற்ப தன்னில் பலவற்றை இழந்தும் வேறு பலவற்றை ஏற்றும் புதிய பரிமாணத்தில்தான் பயணிக்கிறது. எந்த ஒரு கலையும் அப்படித்தான். அப்படித்தானே ஒரு நதியின் பயணம் கூட! சிறுசிறு நீரோடையெல்லாம் பேராறாய் பெருகி கடல் போய் சேருவதில்லை. வந்து சேரும் சிற்றோடைப் போலவே பலபலவாய் பிரிந்தோடலும் இயல்புதான். அணைக்கட்டுக்குள் அடங்கி வழுவிழந்து வற்றிப் போகும் பொய் கனவாகக் கூட இருக்கலாம். பரவாயில்லை. திசைகளும் தடைகளும் ஒரு பொருட்டேயில்லை. தடைகள் கரையும், பாதைகள் பூக்கும் என்ற நம்பிக்கை மீதுதான் ஒரு நதியின் பயணம். அப்படித்தானே ஒரு நட்பின் பயணமும் கூட!
நட்பு#நதி
எந்த வாழ்க்கையில்தான் நட்பு என்ற ஒன்று இல்லாமல் இருக்கிறது? ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மாதிரியான தேவைகள், திணிப்புகள். தனிமை நம் வாழ்நாளின் மிகச் சிறிய பகுதியையே எடுத்துக் கொள்ளப் போகிறதென்பதை உணரும் முன்னமே நட்பென்ற ஒன்று நம்மின் வெறுமைகளை நிரப்பித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நட்பும் சிறுசிறு துளியாய் நம் வாழ்வில் வலிமை சேர்த்துக் கொடுக்கின்றது. ஒரே நட்பே வாழ்வின் முழுமைக்கும் நீண்டு கொண்டிருந்தால் அது நாம் செய்த, செய்ய போகின்ற அத்தனை புண்ணியங்களுக்கும் சேர்த்து இறைவன் கொடுத்த வரம். நினைவுகளை தந்துவிட்டு மறைந்து செல்லும் நட்பெல்லாம் சுகமா சுமையா என்றால் சுகம் என்றே நான் சொல்லுவேன். இதோ உனது இறுதி மூச்சுக்கான தருணம் வந்து கொண்டிருக்கிறது, உன் வாழ்வில் கடந்து வந்த நட்பை மட்டுமே நினைவுகூர்ந்துக் கொள்ளென சில மணித்துளிகள் இறைவன் அருளினால் அப்பொழுது என் மனநிலை இவ்வாறாய்தான் இருக்கும்.
விளையாட்டும் இன்று விளையாட்டு எனத் தோன்றும் சில நூறு சண்டைகளும் நிறைந்த அந்த பால்ய காலங்களெல்லாம் மறந்தே போனாலும் அது எப்படி இருந்திருக்குமென இக்கணத்தில் உதிக்கும் எந்தன் கற்பனையையே நிஜமென்றெண்ணி ஒரு புன்முருவல் மலரும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரிந்த நாங்கள் எப்படியோ மெல்ல மெல்ல ஒன்றாகி வீட்டையும் சமூகத்தையும் தாண்டிய எங்களுக்கான புதிய பாதைதனில் பயணித்த காலங்களின் உற்சாகம் நினைவலைகளை உரசி உசுப்பிச் செல்லும். கரைகளைத் தாண்டியோடிய ஆசைகளுக்கும் திமிர்களுக்கும், தடைகளை உடைத்தெறிந்ததும் உடைத்தெறிய முற்பட்ட ஆணவம் பொங்கிய கருவங்களுக்கும் உயிரும் வலிவும் கொடுத்த அந்த நட்பும், நட்புக்கு மட்டுமேயான அந்தக் காலங்களும் மீண்டும் வேண்டுமென அழுதழுது ஏங்கும் மனம் ஒரு பாரத்தை ஒவ்வொரு அணுக்களிலும் ஏற்றிவிட்டு வலி சேர்க்கும் நொடிகள் மெல்ல படரும். வாழ்க்கையின் யதார்த்தங்கள் அதற்கான கடமைகளை செய்ய கேட்டு கூக்குரலிட்ட போது தேவையுணந்து விலகிச் சென்ற நட்புகளும், எப்படியென்றும் எப்பொழுதென்றும்கூட தெரியாமல் காலத்தை எதிர்க்கொள்ளவதற்கான தகுதிகளை என்னுள் செதுக்கி விட்டு நின்று மறைந்ததும், இன்றும் துணை நிற்கும் நட்புகளும் ஒருவித பெருமித கொந்தளிப்புக்களை ஒரு மௌனத்திற்குள் புதைத்து இதயத்தோடு மட்டும் இசைக்கும் ஒர் பேரானந்த சங்கீதத்தை உள்ளமெல்லாம் ஊற்றி மயக்கும். ஐயமேதுமின்றி இக்கணமே இறை பெருஞ்சோதியில் சங்கமித்திட வரம் கேட்டு மனம் பரிதவிக்கும்.
ஒரு சிற்றூற்றாய் தோன்றித் தவழ்ந்தோடி ஆற்றல் பல பெற்றுப் பெருவெள்ளமாய் பாய்ந்து பரந்து பின்பு அமைதியாய் கடலில் சங்கமிக்கும் ஒரு மகாநதியின் பயணமும் கூட நம் வாழ்வில் நட்பின் பயணம் போலத்தானே!

Comments