போகிற போக்குல மனசத் தொட்டு பொண்ணுத்தாயி போயிட்டா, நீங்க உடனே "அவள் வருவாளா அவள் வருவாளா, என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா, பூமி மீது நானும் பிறந்ததிற்க்கு பொருளிருக்கு பொருளிருக்கு"ன்னு பாட்டு கட்டுவீங்க. ரெண்டு மூணு நாளு கழிச்சி "எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை. நீ வருவாயோ இல்லை மறைவாயோ"ன்னு புலம்பக் கூட செய்வீங்க. "கொஞ்சம் நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா கண்ணிரண்டில் போர் தொடுப்பான்னு" யாரவது ஒரு பிரண்டு உசுப்பேத்தி விடனும், இல்லான அதுதான் உண்மைன்னு நீங்களே உங்களத் தேத்திக்கனும். இப்படித்தான் காதல் ஆரம்பிக்குமோ?
காதல் என்றால் என்ன?இது ரொம்ம சிம்பிளுங்க! ஒரு கல்லும் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் அதுதான் காதல். சில சமயம் ஒரு சொல் சில மெளனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் கூட காதல்னு சொல்லலாம். இன்னும் கொஞ்சம் கவித்துவமா சொல்லனும்னா "இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது"ன்னு வச்சிக்கிலாம். அப்கோர்ஸ், அது நமக்கெல்லாம் புரியாது. உங்களுக்கு உவமையா சொன்ன பிடிக்கும்னா, இது ஓ.கே வான்னு பாருங்க. "காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல ஏனிந்தத் தொல்லை என்று தள்ளிப் போனால் புன்னகை செய்து கொஞ்சும் தாய்போல"
நீங்கள் காதல்வயப்பட்டுவிட்டதற்கான அறிகுறிகள்:கொஞ்சமும் சலனமற்ற கிணற்று நீர். சந்தோஷமா நீந்தி மகிழ்கின்ற மீன். மீன் கொத்திய போல நீ கொத்துற ஆள! அவ்வளவுதான்ங்க. என்ன நடக்குதுன்னு தெரியறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும். காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோடு காடாக கட்டிபோட்டியா என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துதுன்னு கதற கதைக் கூட கேட்டு இருப்பீங்க. நீங்க கொஞ்சம் தெளிவாயில்லைன்னா, கீழே இருக்கிற பட்டியல வச்சி செக் பண்ணி பாருங்க, உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருக்கான்னு!
- உங்களுக்கு பூவும் பிடிக்குது நாரும் பிடிக்குது நீரும் பிடிக்குது நெருப்பும் பிடிக்குது (பைத்தியம் பிடிக்குது) எல்லாம் அவளாலே
- அவ உங்க முன்னே வந்த கொஞ்ச நேரம் உங்க விழி எங்கும் பூக்காலம். உடல் கொதிக்குத்து. உயிர் மிதக்குது. அய்யோ அய்யையோ அது உங்களுக்கு பிடிக்குது. எடை குறையுது. தூக்கம் தொலையுது. (அய்யோ பைத்தியமே பிடிக்குது)
- முதன் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியின் ஒரம் வழிந்தது
- வாசல் கதவை யாரோ தட்டும் ஓசைக் கேட்டால் அவள்தான் என்று பார்ப்பீர்கள். பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே அவள் என்றே இப்போதெல்லாம் தேடும் உங்கள் விழி
- காலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே. கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே. [காமடி இல்லங்க, ரொம்ப சிரியாஸாதான் சொல்லி இருக்காங்க. கொஞ்சம் உங்களையே கேர்-ப்புல்லா வாட்ச் பண்ணிக்குங்க]
- சிறகுகள் வந்தது எங்கோ செல்ல. இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல. நினைவுகள் ஏங்குது அவளைக் காணவே! (கனவுகள் பொங்குது எதிலே அள்ள - நல்லா இருக்கில்ல?)
- ஆத்தி அவ உங்களை பார்த்தவுடனே காத்தில் வச்ச இறகானீங்க. காட்டு மரமா வளர்ந்த நீங்களும் ஏத்தி வச்ச மெழுகானீங்க.
- .... இன்னும் பல, ∞ வரை!
காதல் வலிக்குமான்னா அது எப்படின்னு சிரிக்கத்தான் தோணுது. ஆனாலும் நிறையா பேரு சொல்றதனால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கு. ஒருத்தர் சொல்றார்: அவள் விழியாலே என் வழி மாறும், கண் தடுமாறும். இது ஏதோ ஒரு புது ஏக்கம். அது வலித்தாலும் அதை மனம் ஏற்கும். இன்னொருத்தர் சொல்றாரு, கொள்ளைக் கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே. (வலிக்காதா என்ன? இருந்தாலும்) இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதேன்றார். இன்னும் ஒண்ணே ஒண்ணு: தீயென புரிந்தும் சிலர் திரும்பவும் தொடுவாங்களாம். அதை தீன்னு தெரிந்தே சுகமாய் சுகமாய் எறிவாங்களாம்.
அந்த மந்திர வாக்கியம்:கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் மரகத வார்த்தை சொல்வாயா மெளனத்தினாலே கொல்வாயானு தொடங்கி, என்ன சொல்லப் போகிறாய்... என்ன சொல்லப் போகிறாய்...ன்னு அழுது புலம்பி கடைசில, ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்னு சொல்ற எத்தனை பேர நீங்க பார்த்திருக்கீங்க? இந்த காதல்லதாங்க சின்ன சின்ன விஷயம்லாம் கூட ரொம்ப பெருசா பேசுவாங்க. நான் உன்ன காதலிகிறேன்னு சொன்னதக்கேட்டு வர ரியாக்ஷ்னுக்கு சில சாம்பிள்ஸ் பாருங்க.
விக்ரம் பிரபு:சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாளல. இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல. இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணிப் பார்க்கல.
தனுஷ்:ஹே... ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா. ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா. ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறு ஒண்ணு ஓடுறத பாரு.
பிரபு தேவா:மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே. ஓ... லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே. உன் வார்த்தை தேன் வார்த்ததே. மெளனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே.
இதோ எச்சரிக்கை மணி:
இத மட்டும் சொல்லாமல் விட்டா எப்படி.... இதுவும் ஒரு கடமை இல்லையா... மது நாட்டிக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு மாதிரி.
"வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு" "வேணாம்டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம். பின்னாடி போய் நான் கண்டேன் ஞானம்". இப்படி எல்லாம் அறிவுரை சொல்லுவாங்க. அதெல்லாம் கண்டுக்காதிங்க! காதலுக்கு கண்ணு மட்டுமில்ல, காதும் இல்லைங்க!
ஸ்கூல்லா மார்க்குக்கா படிச்சி பாதி ஞாபகம் இருக்கிற (இப்ப கூகுள் பண்ணி எடுத்தது) இதையும் இங்க சும்மா சேர்த்துக்கிறேன்.
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்! இனியே
பாரி புறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.
இவ்ளோ நீளமான பிளாகாயிருந்தா நான் நேரா இந்த கடைசி பத்திகுத்தான் வருவேன். நீங்களும் அதையே செஞ்சிருந்தா ரொம்ப சந்தோஷம்தான். படிக்கிறதுக்கு இதிலேயும் மேட்டர் ஒண்ணும் இல்ல, சொல்ல வந்தது காதலர் தின வாழ்த்துக்கள் மட்டும் தான்.
மேற்கோளுக்குதவியவை:
சிவா மனசுல சக்தி, லேசா லேசா, நேருக்கு நேர், கண்ட நாள் முதல்...
மிளைக் கந்தனார் என இங்கு தேடுங்கள்
http://learnsangamtamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/
Kovil Pillai P.
Comments