அப்படி என்னத்தான் இருக்கோ இந்த பாழாய் போன காதல்லன்னு ஏளனமாய் கேட்டுக் கொண்டிருக்கும் போதேக் கூட கேட்கும் கூட்டத்தை மெல்லிய தென்றலுக்குள் ஊடுருவித் திக்குமுக்காட்டம் போடச் செய்யும் வன் சூறாவளியாய் நொடிப் பொழுதில் மோதி மயக்கி தனக்குள்ளாக்கி வித்தைக் காட்டும் காதலின் வினோதத்தை ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சென்றார்களாதலால் காதலுக்கும் அளவுண்டாயென்றால் மரணத்தையும் மடமையாக்கி வாழ்ந்து சிரிக்கும் காதல் தன்னை எல்லா விதிகளுக்கும் ஒரு விலக்கு உண்டென்பதற்கு உதாரணமாய் நிறுத்திக் காட்டும் போது நம்மாலதை எளிதாக நம்பி விட முடிவதில்லைதானே?
தாஜ்மஹாலென்ன பொன்னும் பொருளும் உண்டென்றால் அந்த சூரியனில் கூட நிழல் வேலியமைத்து அதற்குள் ஓராயிரம் தாஜ்மஹால் கட்டுவேனென்போர்க்கு நாளேட்டின் ஓர் மூலையில் ஒரு கட்டச் செய்தியாகக் கூட இடமெடுக்க முடியாமல் மறைந்து போன காதலெல்லாம் கூட அமரகாவியங்கள்தானென எப்படி எடுத்துரைப்பது?
நாளெல்லாம் காதலில் உழன்று பித்தாய் பணி மறந்திருப்பதுதான் காதலென்றால் வையத்தில் வழியேது வாழ்வெதற்கு என வினவினால் அன்றன்று என மறுத்து செய்வனவெல்லாம் சிறப்புறச் செய்ய பின்னிருந்து ஊக்குவிக்கும் இணையற்ற உந்து சக்தி தானென்று முன்னின்று பெருமிதம் கொள்ளும் காதல் பொய்மையிலும் மெய்மை போற்றும் உண்மை விளம்பித்தான் போலும்!
காதலர்களுக்கென்றோர் தினமாம் காதலர் தினமெனவே வாழ்த்துக்கள் இந்நாளில் - அன்பு மிகுதியால் அன்பளிப்போர்கும் அன்பளிப்பை விற்போர்க்கும்!
Kovil Pillai P.
Comments