நகரத்துக் காலை நேரத்துப் பரபரப்பு அடங்கியதாலோ என்னவோ, நான் வார இறுதியில் பயணித்த பேருந்தின் ஓட்டுநர் மென்மையான பாடல்களை ஒலிக்கச் செய்துகொண்டிருந்தார். “மீனம்மா” பாடலின் “அம்மம்மா… முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே…” என்ற வரிகள் ஒலித்தபோது மெதுவாகத் தூக்கிப் போட்டது — பேருந்தல்ல! அது ஆண் குரலுக்கான வார்த்தைகளாய் தோன்றினாலும், பெண் குரலில் ஒலித்த அந்த வரிகளின் கற்பனை மிகுதி ஏதோ சிந்திக்கச் செய்தது. பார்வையில் உரையாடிக் கொள்ள முடியும்தான், ஆனால் அதைக் காவியமாக்கிக் கொண்ட கற்பனைத்தான் சற்று வியப்படைய வைத்தது. வண்ணங்களைப் பூசிக் கொண்டு அழகு கொள்ளும் வெண்ணிற ஆடைபோல, கற்பனைகளைத் தரித்துக் கொள்வதில்தானே கவிதைகளே பிறக்கின்றன, அதுவும் காதல் கவிதைகளுக்குச் சொல்லவா வேண்டும்! பொதுவாகக் கற்பனைகளில் பல உண்மையாகுவதை நாம் பார்த்திருக்கிறோம், அறிவியலின் படைப்புகள் பெரும்பாலும் இப்படித்தானே. சட்டென்று ஒரு ஐயம் — காதல் கவிதைகள் எல்லாம் இதற்கு எதிர்மறையாக இருக்குமோ — அதாவது உண்மைகளைத்தான் கற்பனை என்று எழுதிக் கொண்டிருக்கிறார்களோ என்று. வேம்பின் பைங்காய் என்தோழி தரினே, த...
Beyond your imagination